Friday, November 11, 2011

REVOLUTION 2020 - புத்தக விமர்சனம்

Five point someone, One night@ call center, The 3 mistakes of my life, 2 states போன்ற விற்பனையில் சாதனை படைத்த நூலின் ஆசிரியர் சேத்தன் பகத்தின் சமீபத்திய வெளியீடு இப்புத்தகம். காதல், காமம், நட்பு, சோகம், நகைச்சுவை என எல்லாமும் கலந்து கட்டி அடிக்கும் இவரின் புத்தகத்தில். இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. இவரின் Five point someone நாவலை தழுவி எடுக்கப்பட்ட 3 இடியட்ஸ் மெகா ஹிட்டடித்தது. இந்த நாவலின் உரிமையையும் வாங்க கடும் போட்டி என்று செய்தி. ஒரு முழு நீள மசாலா படம் பார்த்த அனுபவத்தை தரும் இந்நாவலின் கதை -----வாரணாசியில் கங்கா டெக் நிர்வாகவியல் கல்லூரி திறப்பதற்காக சேத்தன் சிறப்பு விருந்தினராக செல்கிறார். அந்த கல்லூரியின் நிறுவனர் கோபால் விழா முடிந்ததும் சேத்தனை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.அங்கு  கோபால் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயக்க நிலைக்கு செல்கிறார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரிடம், தன் கதையை கோபால்  சொல்வது  போல கதை விரிகிறது.

கோபால் -அம்மா இல்லாத அவனுக்கு அப்பாவின் தினசரி ரொட்டி போரடித்ததால்,பள்ளியில் பிரேயர் நடக்கும் நேரத்தில் ஆர்த்தியின்
கேக்கை எடுத்து தின்று விடுகிறான் . ஆசிரியையிடம் மாட்டிக்கொள்வதில் இருந்து மோதலுடன் ஆர்த்தியுடன் நட்பு ஆரம்பம் ஆகிறது.

பள்ளி பருவத்தில் இருந்தே கோபாலுக்கு ஆர்த்தியும், ஆர்த்திக்கு கோபாலும் தான் தோழர்கள். கோபாலின் தந்தையின் ஆயுள் அவருக்கு சொந்தமான நிலத்தை அவரின் சகோதரரிடம் இருந்த மீட்பதிலேயே கழிகிறது. அவருக்கு கோபாலை IIT  அல்லது NIT  யில் சேர்த்து இஞ்சினியர் ஆக்க வேண்டும் என்பது கனவு.

அதற்காக இரண்டு முறை முயற்சித்தும் தோல்வியே கிடைக்கிறது. ராகவும் அவனது பள்ளித்தோழன். அவன் IIT -JEE தேர்ச்சி பெற்று அந்த ஊரிலேயே IT -BHU  வில் சேர்கிறான்.

கோபால் இரண்டாம் முறை தேர்வு பயிற்சிக்காக கோட்டா சென்ற போது ஆர்த்திக்கும் ராகவுக்கும் காதல் மலர்ந்து விடுகிறது. கோபால் தேர்விலும் தோல்வியுற்று, காதலிலும் தோல்வியுறுகிறான். அவன் தந்தையும் அதே நேரத்தில் இறந்து விடுகிறார்.

ஆனாலும் ஆர்த்தியுடன் நட்பு தொடர்கிறது.அதுதான் அவனது ஒரே ஆறுதல். நண்பன் ஒருவன் தயவினால் உள்ளூர் MLA  வின் உதவியுடன் அவனது நிலத்தை மீட்கிறான். அந்த நிலத்தில் MLA  வின் பணத்தில் பொறியியல்  கல்லூரி ஒன்றை அமைக்கிறான்.

ராகவ் பத்திரிக்கை துறையில் நுழைந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவன். அந்த உள்ளூர் MLA  வின் கங்கை தூய்மையாகும் திட்டத்தில் செய்த ஊழலை வெளிக்கொண்டு வந்து அவர் பதவி விலக செய்கிறான்.

கோபாலின் உண்மையான , ஆழமான அன்பினால் ஆர்த்தி அவனிடம் தன் உடல் , மனம் இரண்டையும் இழக்கிறாள். ராகவை விட்டு பிரிய முடிவெடுக்கிறாள். அதற்காக ராகவை சந்திக்க கோபால் செல்கிறான்.அங்கு அரசியல்வாதிகளின் ஊழலால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாடும் ஏழைக் குழந்தையைப் பார்க்கிறான்.

அதன்பின் அவன் பங்களாவுக்கு வந்து அவனுள் என்ன மாற்றம் ஏற்படுகிறது? ஆர்த்தியுடன் அவன் சேர்ந்தானா என்பதே முடிவு.

நாவலின் சுவாரசியங்கள் :


IIT நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்காக மாணவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாதவை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே ஒருவன் பனிரெண்டாம் வகுப்புக்கான IIT  புத்தகங்களை படித்தாக வேண்டும். அப்பொழுதுதான் அவன் தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக நிறைய பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதற்காக மாணவர்களை படுத்தும் பாடு நிறைய.அவர்கள் சிறு வயது கொண்டாட்டங்களுடன் , இளமையும் சேர்த்தே கழிகிறது. IIT யில் வருடத்தில் சேர்வது கிட்டத்தட்ட 9000 மாணவர்கள் தான். அந்த அனைவருமே வாழ்வில் உயர்ந்ததாக, பெரிய பதவியில் இருப்பதாக தெரியவில்லை. 
அதன் நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் சேரவே தனி நுழைவு தேர்வு. அந்த நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க சில பயிற்சி நிலையங்கள் என நிகழ் கால உண்மைகளை இந்நூல் அலசுகிறது.


நான் நான்கு வருட இஞ்சினியரிங் படிக்க ஆன பணம், அந்த பயிற்சி நிலையங்களின் ஒரு வருட கட்டணத்தை விட குறைவு. ஏழை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மிடில் கிளாஸ் குழந்தைகளுக்கே அது எட்டாக்கனிதான். என்னதான் படித்தாலும், ஏழை குழந்தைகளுக்கு IIT  வெறும் கனவாகவே தான் இருக்கும்.

பெற்றோரின் வற்புறுத்தலால் விருப்பே இல்லாமல் அத்தகைய பயிற்சிக்கு சேர்ந்து மூன்று வருட வாழ்க்கையை வீணாக்கும் பிரதிக் போன்ற எத்தனையோ மாணவர்கள் நம் நாட்டில் உண்டு.

பத்திரிக்கையில் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ராகவ் நினைத்தாலும், அவன் இஞ்சினியர் ஆக வேண்டும் என்று அவன் தந்தை கட்டாயப் படுத்துகிறார். இது இளைஞர்கள் அனுபவிக்கும் மற்றொரு இன்னல்...

தனி ஒரு மாணவன் ஒரு பத்திரிக்கையாளனாக பணி செய்வதற்கு அரசியல் வாதிகள் போடும் முட்டுக்கட்டைகள் மற்றொரு அத்தியாயம். அரசியல்வாதிகள்  கொடுக்கும் விளம்பரம் கிடைக்காதோ என எண்ணி , அவனை வேலையில் இருந்தே விரட்டும் பத்திரிக்கை, அவன் வெளியிட்ட செய்தியால் அவன் அலுவலகத்தை சூறையாடும் அரசியல்வாதியின் கைத்தடிகள் என நிறைய நிஜங்கள். ஆனாலும் ஒரு பத்திரிக்கையின்  ஆதாரமான உண்மை செய்தியால் மாற்றத்தை உண்டாக்க முடியும் என கதை ஆழமாக நிரூபிக்கிறது.

ஒரு கல்லூரி தொடங்க கொடுக்க வேண்டிய லஞ்சம் பற்றி  தெளிவாக சிவாஜி படத்தில் பார்த்தோம். இதிலும் கல்லூரி கட்டுவதில் ஆரம்பித்து, ஆசிரியர் நியமனம் முதல் அதிகாரிகளின் விசிட் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.

எல்லாம் விட இந்த நாவலின் சிறப்பம்சம் ஆர்த்தி - கோபால் உண்மையான காதல். கங்கை நதிக்கரையில் படகு சவாரி செய்வதில் இருந்து சினிமா, காபி குடிக்க செல்வதிலிருந்து பள்ளி நேரம் வரை எல்லா நேரமும் இருவரும் சேர்ந்தே வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். கோபால் கோட்டா சென்ற நேரத்தில் ஆர்த்தியுடன் ராகவுக்கு ஏற்படும் காதலினால் பொங்குவதும், அதனால் ஆர்த்தியுடன் சண்டையிட்டு பிறகு அவள் நினைவு எழுந்து மீண்டும் சமாதனம் ஆவது என நிறைய கவிதை எபிசோடுகள்.

ஆர்த்தி ராகவை காதலித்தாலும்  கோபாலிடமே நீண்ட நேரம் செலவளிக்கிறாள். பெண்களின் மனதை புரிந்து கொள்வது கடினம் இல்லை என்பதை கோபால் நிரூபிக்கிறான். அவளின் மனதை ஒவ்வொரு கணமும் புரிந்து கொள்கிறான். முதல் முறை படகில் முத்தம் இட்ட பிறகு, அவளிடம் மீண்டும் சந்திக்கலாமா என கேட்கிறான்.   அவள் ஏன் ? எப்பொழுது ? என கேட்காமல் எங்கே என கேட்பதில் இருந்து, அவளின் மறு முத்ததிற்கான சம்மதத்தை உணர்கிறான்.

இப்படி ஆர்த்தி, கோபாலின் காதல் நாவல் முழுக்க நட்பு, கோபம், ஊடல், கூடல் என பல பரிணாமத்தில் மிளிர்கிறது.
ஆனால் இந்த நாவலின் முடிவு, எல்லோரும் விரும்புவார்களா என தெரியவில்லை. சேத்தனின் முந்தய நாவல்களைப்போல இதுவும் மகிழ்ச்சியான முடிவாகவே இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம் .
மொத்தத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை விடாமல் படிக்க தூண்டும் ஒரு மசாலா நாவல் - Revolution  2020 

Wednesday, November 02, 2011

சிறு கவிதைகள்

வெயில்
மதிய வேலையில் நடக்கும்பொழுது
வெயில் என்று மூடிக்கொள்கிறாய் முகத்தை
உன் முகம் காணாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரிக்கிறது சூரியன்.

துரதிஷ்டம் 

 உன்  முகம் காணாத நாட்களை
மறுநாள் தேதி கிழிக்கும்போழுது பார்க்கிறேன்
ராசிபலனில் துரதிஷ்டம்

வாசனை

நீ தலை குளித்தவுடன்
எழும் வாசனையில்
பூக்கள் தலைக்குனிவுடன்
ஒப்புக்கொள்கிறது தன தோல்வியை .

நீலம்
வான நீல வண்ணம்
எனக்கும் பிடிக்கும் என்றாய்
இப்போதெல்லாம் நான் வானத்தை
பார்க்கிறேன் பொறாமையாய். 
செருப்பு
காலம் காலமாக மிதிபட்டே வந்தபோதும்
கல்லும் முள்ளும் குத்தி காயப்பட்டபோதும்
வாசலிலேயே நிறுத்தி அவமானப்படுத்தப்பட்ட போதும் 
போராட திராணியற்ற  செருப்பும்  
தாழ்த்தப்பட்ட சாதியோ !
பெண் சிசு 
வகை வகையாய் வரிசையுடன்
வளைகாப்பு கொண்டாடி
குடும்பம் கூடி சீட்டெடுத்து
செல்லப்பெயர் கண்டெடுத்து
குங்கும பூவும் இன்ன பிறவும்
குடம் குடமாய் கொண்டு வந்து
மாநகரில் மிகச்சிறந்த
மருத்துவமனையில் வந்துசேர்த்து
தாய்சேய் நலப்பிரிவில்
ஸ்கேன் பண்ணி பார்த்த பிறகு
தாய் மட்டும் நலமா
வந்து சேர்ந்தா வீட்டுக்கு .

புத்தாண்டு கொண்டாட்டம்

யாம வேலையில் மிகுந்தது
வாலிபர் கூட்டமங்கே
விண்ணைப் பிளந்தது அதிர்வேட்டுகள் நாதம்
உணவு கொட்டி விளையாடினோர் ஓர் புறம்
ஆங்கே கூழுக்கும் வழியில்லை சேரிப்புறம்
கட்டித்தழுவினார் இருபாலர் வாஞ்சையோடு
அங்கே கதறி அழுதது நாட்டின் கலாச்சாரம்
Happy New Year  என ஐநிலங்களிலும்
பறந்தது குறுஞ்செய்தி - ஆங்கே
விரைந்து அடிக்கப்பட்டது தமிழுக்கு இறுதிமணி
எத்தனையாண்டு பல வந்தாலும்
இக்காட்சி மாறாது என் தாய்த்திருநாட்டில். 

இணைய வலை

படம் பார்க்கலாம் என கிளம்பி
பளபள ஆடை உடுத்தி
பட்டென்று அமர்ந்தான் கணினி முன்னே.


அழுக்கு லுங்கி அணிந்துகொண்டு
வாராத தலையுடன் துலக்காத பல்லுடன்
காட்டான்குப்பதில் அமர்ந்து கடகடவென அடித்தான்
"I m Victor frm USA"- குப்பனாகிய அவன் .

சில வருடம் மிதிவண்டி
சில நாள் நண்பனின் பைக்
பல நாள் பின்தொடர்வு என
பல வலை வீசியும் மயங்காத அவள்
ஒரே வாரத்தில் வீழ்ந்தால்
இணைய வலையில்.

இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும்
பல நிறுவனங்கள் அறிவிப்பு
அந்த தளம் எந்த ஊரில் என அறியாமையில்
குக்கிராமத்தில் நான்.

தேர்வில் என்பதுக்கு மேல்  என
காலம்காலமாக அப்பாவிடம் விட்ட கதை
கந்தலாகிப்போனது இணையத்தில்
முடிவுகள் பார்த்த அவரிடம். 

வாலிப வாரம்

சித்திரை முதல் பங்குனி வரை
எந்தத் திங்களிலும் புத்தகத்தை தொடாமல்
நித்திரையிலே மூழ்கி

வாழ்விலே என்றாவது முன்னேறுவேன் என
செவ் வாயாலே வெறும் வார்த்தைகளை வீசி

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது  என
கிடைத்த பெண்களின் பின் சுற்றித்திரிந்து

சூரிய குடும்பத்திலே பெரிய கோள் வியாழன்
எனது ஊரிலே பெரிய ஆள் நான் என
வாய் நிறைய வியாக்கியானம் பேசி

வெள்ளி நிற வண்டியிலே இரவு முழுதும்
ஊர் சுற்றி திரிந்து ஓய்ந்து

'' இந்த சனி பிடிச்ச கழுத எங்க உருப்பட போவுது" என
ஊர் உலகத்திடம் வசவுகள் வாங்கி

தன வாழ்விலும் ஞாயிறு மலருமென
கனவிலே மிதந்தான் கல்லாத மூடன். 

மொழி - சிறுகதை

அதிகாலை 4 .30  மணிக்கு நாக்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது ரகுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ரயில் நிலையத்தில் எழுதி இருந்த வாசகங்கள், அந்த மனிதர்கள் பேசிக்கொண்டிருந்த மொழிகள், அந்தக் காலை நேரத்திலும் ஆவி பறக்க விற்றுக்கொண்டிருந்த போஹா என அனைத்தும்.அவன் தன்னருகில் இருந்த சுரேஷை திரும்பிப்பார்த்தான். அவனுக்கும் அதே உணர்வு.

ரகு, சுரேஷ் இருவரும் கல்லூரி முடித்துவிட்டு வளாகத்தேர்வின் மூலம் ஒரு MNC நிறுவனத்தில் கிடைத்த  வேலையில் சேர நாக்பூர் வந்திருப்பவர்கள். நாக்பூரில் மராத்தி பேசுவார்களா , ஹிந்தி பேசுவார்களா என்ற குழப்பம் அவர்கள் முகத்தில் துளியும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு இரண்டுமே தெரியாது. 

30 நாட்களில் ஹிந்தி புத்தகம் ஒன்றை 20  ரூபாய் கொடுத்து வரும் வழியில் வாங்கியதன் பயனாக அவர்களுக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பரிச்சயமாகி இருந்தது. நிறுவனத்தின் பனி நியமன ஆணையுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் முகவரியும் இருந்த கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டான் ரகு.

ரயில் நிலையத்தின் வாசலை தனக்கு முன்னே சென்று கொண்டிருந்தவரின் துணையுடன் அறிந்துகொண்டனர். வாசலில் ஜெர்க்கின் அணிந்திருந்த ஒரு ஆட்டோ டிரைவர் இவர்களை நோக்கி வந்து , சுரேஷின் கையைப்பிடித்து இழுக்காத குறையை தனது ஆட்டோவுக்கு கூட்டிச்சென்றான்.

"கஹாங் ஜானா ஹை பாய் ?"

ரகு தன கையில் இருந்த கவரை அவன் முன் நீட்டினான்.

" உதர் ஜானே கே ஏக் சௌ ருப்யா (நூறு ரூபாய்) லகேகா ?"

" நஹி நஹி . ஒன் ஹண்ட்ரட் அண்ட் பிப்டி ஒன்லி " - சுரேஷ் பேரம் பேசிய திருப்த்யில் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.

"மச்சி. எப்டிடா ஹிந்தி அதுக்குள்ள உனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி ?" - ரகுவின் கேள்வி சுரேஷின் மனதுக்குள் சிறிது நேரம் பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டது.

வட இந்திய  காலை நேர குளிர் அவர்கள் உடலை சில்லிட செய்தது. நிறுவன கடிதத்தில் வரும் பொழுது கொண்டு வரச்சொன்ன ஜெர்க்கின் அப்பொழுது அவர்களுக்கு அவசியமாய் இருந்தது .இருவருக்குமே ஜெர்க்கின் அணிவது அதுதான் வாழ்வில் முதல் முறை.

அறைக்கு வந்தவுடன் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில்  ஒவ்வொரு சேனலாக மாற்றிப் பார்த்தனர். தொண்ணூறு சேனல்களில் ஒன்று கூட தமிழ் சேனல் இல்லை. பயணக்  களைப்பை விட இது அவர்களுக்கு பெரிய களைப்பைத் தந்தது.

மறுநாள்தான் கம்பனியில் சேர வேண்டி இருந்ததால் , சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதிய உணவிற்காக அருகில் இருந்த மெஸ்ஸுக்கு சென்றனர்.அங்கெ அவர்களுக்கு எண்ணையில் போடாத ரொட்டியும், டாலும் காத்திருந்தது .வேறு என்ன அங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள அவர்களுக்கும் ஆசைதான். ஆனால் எப்படி கேட்பது, யாரிடம் கேட்பது என்று நினைக்கும் போதே அவர்களுக்கு பசி பாதி போய்விட்டது.

சிக்கன் இருந்தால் பரவாயில்லை என ரகுவிற்கு தோன்றியது. ஆனால் சிக்கனுக்கு ஹிந்தியில் என்ன என்று தெரியவில்லை. முட்டைக்கு அண்டா என புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது.

"பையா ! அண்டா கா அம்மா ஹை ?"
" க்யா?" - கடைக்காரன் ஆச்சர்யமாக பார்த்தாலும் அவர்களின் சைகையைக் கண்டு குறிப்பறிந்து விட்டான். 

" ரகு. ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்குடா. சின்ன வயசுல படிக்காம விட்டது தப்ப போச்சுடா"
"இங்க வந்துட்டம்ல. இன்னும் ரெண்டு மாசத்துல கத்துக்கலாம்டா .இதுக்கு ஏன்டா பீல் பண்ணனும் "
"அப்படி இல்லடா. மூணாவது மொழியா இத படிச்சி இருந்தா இப்ப உதவியா இருந்திருக்கும் இல்லடா. எல்லாம் நம்ம அரசியல்வாதிங்க பண்ணனது தாண்டா "
"அது எப்டிடா  சுரேஷ்.இன்னைக்கு தமிழ் நாட்டுல கட்டட கூலி வேலை செய்றவங்க, குறைஞ்ச சம்பளத்துக்கு கெடைக்கிராங்கனு தமிழ் நாட்டு கம்பனியில வேல பாக்கிறவங்க, பேங்க், PSU , மத்த மதிய அரசாங்க அலுவலகத்துல வேல பாக்கிறவங்கனு நம்ம மாநிலத்துல இருக்க ஹிந்தி பேசறவங்க எண்ணிக்கையும், தமிழ் நாட்டுல இருந்த இங்க வரவங்க எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்னாதாண்டா இருக்கும். அப்ப மத்த மாநிலத்துக்காரங்க எல்லாத்தையும் தமிழ் படிக்க கட்டாயம்னு சொல்லலாமாடா?"
"இப்பிடி பேசிப்பேசியே தாண்டா நாசமாப் போய்ட்டோம்.என்னமோ போடா"