Wednesday, November 02, 2011

மொழி - சிறுகதை

அதிகாலை 4 .30  மணிக்கு நாக்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது ரகுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ரயில் நிலையத்தில் எழுதி இருந்த வாசகங்கள், அந்த மனிதர்கள் பேசிக்கொண்டிருந்த மொழிகள், அந்தக் காலை நேரத்திலும் ஆவி பறக்க விற்றுக்கொண்டிருந்த போஹா என அனைத்தும்.அவன் தன்னருகில் இருந்த சுரேஷை திரும்பிப்பார்த்தான். அவனுக்கும் அதே உணர்வு.

ரகு, சுரேஷ் இருவரும் கல்லூரி முடித்துவிட்டு வளாகத்தேர்வின் மூலம் ஒரு MNC நிறுவனத்தில் கிடைத்த  வேலையில் சேர நாக்பூர் வந்திருப்பவர்கள். நாக்பூரில் மராத்தி பேசுவார்களா , ஹிந்தி பேசுவார்களா என்ற குழப்பம் அவர்கள் முகத்தில் துளியும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு இரண்டுமே தெரியாது. 

30 நாட்களில் ஹிந்தி புத்தகம் ஒன்றை 20  ரூபாய் கொடுத்து வரும் வழியில் வாங்கியதன் பயனாக அவர்களுக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பரிச்சயமாகி இருந்தது. நிறுவனத்தின் பனி நியமன ஆணையுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் முகவரியும் இருந்த கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டான் ரகு.

ரயில் நிலையத்தின் வாசலை தனக்கு முன்னே சென்று கொண்டிருந்தவரின் துணையுடன் அறிந்துகொண்டனர். வாசலில் ஜெர்க்கின் அணிந்திருந்த ஒரு ஆட்டோ டிரைவர் இவர்களை நோக்கி வந்து , சுரேஷின் கையைப்பிடித்து இழுக்காத குறையை தனது ஆட்டோவுக்கு கூட்டிச்சென்றான்.

"கஹாங் ஜானா ஹை பாய் ?"

ரகு தன கையில் இருந்த கவரை அவன் முன் நீட்டினான்.

" உதர் ஜானே கே ஏக் சௌ ருப்யா (நூறு ரூபாய்) லகேகா ?"

" நஹி நஹி . ஒன் ஹண்ட்ரட் அண்ட் பிப்டி ஒன்லி " - சுரேஷ் பேரம் பேசிய திருப்த்யில் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.

"மச்சி. எப்டிடா ஹிந்தி அதுக்குள்ள உனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி ?" - ரகுவின் கேள்வி சுரேஷின் மனதுக்குள் சிறிது நேரம் பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டது.

வட இந்திய  காலை நேர குளிர் அவர்கள் உடலை சில்லிட செய்தது. நிறுவன கடிதத்தில் வரும் பொழுது கொண்டு வரச்சொன்ன ஜெர்க்கின் அப்பொழுது அவர்களுக்கு அவசியமாய் இருந்தது .இருவருக்குமே ஜெர்க்கின் அணிவது அதுதான் வாழ்வில் முதல் முறை.

அறைக்கு வந்தவுடன் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில்  ஒவ்வொரு சேனலாக மாற்றிப் பார்த்தனர். தொண்ணூறு சேனல்களில் ஒன்று கூட தமிழ் சேனல் இல்லை. பயணக்  களைப்பை விட இது அவர்களுக்கு பெரிய களைப்பைத் தந்தது.

மறுநாள்தான் கம்பனியில் சேர வேண்டி இருந்ததால் , சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதிய உணவிற்காக அருகில் இருந்த மெஸ்ஸுக்கு சென்றனர்.அங்கெ அவர்களுக்கு எண்ணையில் போடாத ரொட்டியும், டாலும் காத்திருந்தது .வேறு என்ன அங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள அவர்களுக்கும் ஆசைதான். ஆனால் எப்படி கேட்பது, யாரிடம் கேட்பது என்று நினைக்கும் போதே அவர்களுக்கு பசி பாதி போய்விட்டது.

சிக்கன் இருந்தால் பரவாயில்லை என ரகுவிற்கு தோன்றியது. ஆனால் சிக்கனுக்கு ஹிந்தியில் என்ன என்று தெரியவில்லை. முட்டைக்கு அண்டா என புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது.

"பையா ! அண்டா கா அம்மா ஹை ?"
" க்யா?" - கடைக்காரன் ஆச்சர்யமாக பார்த்தாலும் அவர்களின் சைகையைக் கண்டு குறிப்பறிந்து விட்டான். 

" ரகு. ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்குடா. சின்ன வயசுல படிக்காம விட்டது தப்ப போச்சுடா"
"இங்க வந்துட்டம்ல. இன்னும் ரெண்டு மாசத்துல கத்துக்கலாம்டா .இதுக்கு ஏன்டா பீல் பண்ணனும் "
"அப்படி இல்லடா. மூணாவது மொழியா இத படிச்சி இருந்தா இப்ப உதவியா இருந்திருக்கும் இல்லடா. எல்லாம் நம்ம அரசியல்வாதிங்க பண்ணனது தாண்டா "
"அது எப்டிடா  சுரேஷ்.இன்னைக்கு தமிழ் நாட்டுல கட்டட கூலி வேலை செய்றவங்க, குறைஞ்ச சம்பளத்துக்கு கெடைக்கிராங்கனு தமிழ் நாட்டு கம்பனியில வேல பாக்கிறவங்க, பேங்க், PSU , மத்த மதிய அரசாங்க அலுவலகத்துல வேல பாக்கிறவங்கனு நம்ம மாநிலத்துல இருக்க ஹிந்தி பேசறவங்க எண்ணிக்கையும், தமிழ் நாட்டுல இருந்த இங்க வரவங்க எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்னாதாண்டா இருக்கும். அப்ப மத்த மாநிலத்துக்காரங்க எல்லாத்தையும் தமிழ் படிக்க கட்டாயம்னு சொல்லலாமாடா?"
"இப்பிடி பேசிப்பேசியே தாண்டா நாசமாப் போய்ட்டோம்.என்னமோ போடா"


1 comment:

  1. நன்றாக கதையாக ஆரம்பித்து கடைசியில் கட்டுரை மாதிரி முடிச்சுட்டீங்க !

    ReplyDelete