Wednesday, February 01, 2012

புற்று நோய் - வேதனைகளை தீர்க்கும் பரிசோதனை - நேசம் +யுடான்ஸ் கட்டுரை

புற்று நோய் - ஒரு பார்வை

புற்றுநோய் என்பது ஒரு நோயல்ல. சாதாரண செல்கள் தனது வளர்ச்சியின்போது செல் பிரிதல் நடைபெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு மரபணுவும் உண்டு. சில செல்களில் சில சமயம் பிரிதலில் வளர்ச்சி கட்டுப்பாட்டை இழந்து வெகு வேகமாக இஷ்டம் போல் பிரிகின்றன. அவை தனக்கு வேண்டிய உணவையும் கூட பக்கத்திலிருக்கும் செல்களிடம் இருந்து அநியாயமாகப் பிடுங்கி, சாப்பிடுகின்றன.
புற்று நோயை தொடக்க நிலையில் கண்டுபிடித்தால், அதைக் குணப்படுத்த முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு, நோயின் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகிய பின்புதான், குணப்படுத்த முடியாத நிலையில் புற்று நோய் கண்டறியப்படுகிறது.ஏனெனில், அந்த நிலைக்குப் பின்னர்தான் அவர்களுக்கு வெளி அடையாளங்கள் தெரிய வருகிறது. எனவே, புற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதுதான் சரியான சிகிச்சை முறை.
உலகில் சுமார் 200 வகை புற்றுநோய்கள் உள்ளன. இதில் சுமார் 10-15 வகைகளே பரவலாக காணப்படுகின்றன. அதில் முக்கியமானவை பெண்களுக்கு மார்பகம், கருப்பையின் வாய் & வயிறு போன்ற இடங்களிலும், ஆண்களுக்கு ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உற்பத்தி செய்து தரும் பிராஸ்டேட் சுரப்பி (Prostate gland) என்ற உறுப்பிலும், வயிறு, சிறுநீரகம் போன்ற இடங்களிலும் பொதுவாக வருகிறது. 
புற்று நோய் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை உலகில் 79 ஆயிரம் பேருக்கு புற்று நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்தியர்கள்.புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள்
உலகத்திலேயே டென்மார்க்கில்தான் அதிக அளவு புற்று நோய் காணப்படுகிறது. இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 1,00,000 பெண்கள் கருப்பை புற்று நோயால் இறக்கின்றனர்.அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா உலகில் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இவை நீங்கலாக ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.
புற்று நோய் எல்லா வகையான விலங்கு களையும் தாக்குகிறது. புற்றுநோய் புதிய நோயும் அல்ல. பல்லா யிரக்கணக்கான ஆண்டு களுக்குமுன் வாழ்ந்து மறைந்த டைனோசர்கள் புற்று நோயால் தாக்கப் பட்டிருந்ததை கண்டறிந் திருக்கின்றனர்.

புற்று நோய் காரணிகள் 
புற்று நோய் வர பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும்.  ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.
புகை பிடிப்பவர் களுக்கெல்லாம் புற்றுநோய் வருகிறதா? புகைக்காதவர்கள் புற்றுநோயால் அவதிப்படுவதில்லையா? இப்படி ஏறுக்கு மாறாக  கேட்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர் பலர். புகைப்பிடிப்பவர்களிடையே நுரை யீரல் புற்றுநோய் அதிகமாகக் காணப் படுவது நன்கு ஆய்ந்தறிந்து சொல்லப் பட்ட ஒன்று. சிலருக்கு வருவதில்லையே எனக் காரணம் காட்டி, புகை பிடித்து வம்பை வலிய விலைக்கு வாங்குவது எவ்வகையில் நியாயம்? மேலும், புகைப் பதால் மட்டுமே புற்று நோய் வருமென்று யாராவது சொன்னார்களா? வேறு பல காரணங்களாலும் புற்று நோய் தோன்றலாம். புகையிலையை வாயில் அடக்கிக் கொள்வது. பாக்குப் போடுவது , பூச்சிக்கொல்லி மருந்துகள் கொண்ட மற்றும் தீய்ந்த உணவுப்பொருட்களைச் சாப்பிடு வது போன்றவற் றhலும் புற்று நோய் ஏற்பட முடியும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தெரிந்த பிறகும், இவற்றைக் கைவிடாமல் இருப்பது அறிவுடைமை அல்லவே.
புற்று நோய் உண்டாவதற்கான துல்லியமான காரணி இதுவரை க்ண்டறியப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணி உள்ளது.
• புகையிலை பயன்படுத்துவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் காற்று மாசு மற்றும் கதிர்வீச்சு காரணமாகவும் நுரையீரல் புற்று வரும் வாய்ப்பு உண்டு.
• புற்றுநோய் என்பது முக்கியமாக 90-95% சூழல் தொடர்பான ஒரு நோய்தான். 5-10% மட்டுமே பாரம்பரிய மரபணுக்கள் மூலம் வருகிறது.
• இதற்கான காரணிகள் என புற்று நோய் ஆராய்ச்சி மையங்கள் அறியப்பட்டவை:
1.புகையிலை: 25-30%
2.உடல் பருமன்:30-35%
3.கதிர்வீச்சு:10% வரை
4.மனழுத்தம், உடல் பயிற்சி இன்மை & சூழல் மாசு..15-20%
2011 பிப்ரவரி கணக்குப்படி, இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.2 கோடிப்பேர். இதில் புகையிலையால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம்.
இந்த எண்ணிக்கையில் 55% புற்றுநோய் தடுக்கக் கூடியது. 65% புற்று நோயாளிகள் இதன் 3& 4 ம் நிலையில் கண்டறியப்பட்டுள்ள‌ன‌ர். இந்த நிலையில் அறியப்படும்போது, அவற்றின் சிகிச்சை என்பது சிரமமானதே.


உடல் பகுதிவாரியாக புற்று நோய் காரணிகள் 
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)

சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.

புற்று நோய் அறிகுறிகள்
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன. அவை: குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.

பொதுவாக அனைத்து புற்றுநோய்களுக்கும், எடை குறைவு, ஏதாவது ஒரு இடத்தில் கட்டி/மதமதப்பு இருக்கும். சில சமயம் காய்ச்சல், இரத்த சோகை மற்றும் இரவில் வியர்த்தல் போன்றவையும் தென்படும்.

புற்று நோய் இருப்பதாக சந்தேகம் வந்தால், மருத்துவ சோதனை மூலம் அதனை அறிவது மிக எளிது. அந்தப் பகுதியிலிருந்து எடுத்த செல்களை ஆராய்ந்தால் அவற்றின் தன்மை தெரியும். புற்று நோயை, அது வளர்ந்திருக்கும் நிலை அறிந்து, அதனை வேதி சிக்ச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

அதனை சரியாக்குவது என்பது நீங்கள் எவ்வளவு தைரியமாய் உள்ளீர்கள் என்பதும், அது எந்த இடத்தில் இருக்கிறது மற்றும் அதன் வளர்நிலை என்ன என்பதைப் பொறுத்துமே அமைகின்றன.


புற்று நோய் தடுப்பு வழிமுறைகள் 

புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

`ஹியூமன் பபிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus – H.P.V) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயான கர்ப்பப்பைப் புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி இருப்பது நம்மில் பலருக்குத்தெரியாது.
ஆண்டுதோரும் 74000 பெண்கள் இந்தியாவில் இந்த நோயால் இறக்கிறார்கள்.
இந்தியாவில் 8 பெண்களில் ஒருவர் உடலில் இந்த வைரஸ் கிருமி இருக்கிறது. எப்போது அது நோயை உண்டாக்கும் என்பது தெரியாது. இவர்கள் நோய் பரப்புபவர்கள்(Carrier) ஆவர்.இது பெண்களிடமிருந்து ஆண்களுக்கு உடலுறவு மூலம் பரவுகிறது. ஆண்களுக்கு ஆணுறுப்பில் புண் போன்றவற்றையும் உண்டாக்குகிறது.
இதனைத்தடுப்பதற்காக அனைவருக்கும் கர்பப்பைப் பரிசோதனையும் பாப் ஸ்மியர் என்ற சோதனையும் எல்லா மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.
நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி என்ற சிகிச்சை முறையை 2-3 தடவை எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். இது ஒரு குணப்படுத்தக்கூடைய வகைப் புற்றுநோயாகும்.

H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.

இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.

1. முதலில் வாழ்க்கையைப் பற்றிய மட்டற்ற, நெகிழ்வற்ற, உறுதியான நம்பிக்கையுடன், நல்ல உணர்வுடன் இருங்கள்.
2.நிறைய தாவர உணவுகள், பயறு வகைகள் சாப்பிடுங்கள்.ஊட்டம் நிறைந்த உணவையே சாப்பிடுங்கள்.இ, சி-வைட்டமின் நிறைந்த உணவு களைச் சாப்பிடுங்கள்.நார்ப்பொருள் நிறைந்த நிறைய காய்கறிகள், பழங்களை உணவைச் சாப்பிடுங்கள்.அதிக சூடான உணவு சாப்பிடா தீர்கள். மிதமான சூடுபோதும். எப்போதும் தீய்ந்த உணவைச் சாப்பிடாதீர்கள்.
3.நிறைய நீர் அருந்துங்கள்.
4.இயற்கைப் பொருள்களையே வீட்டிலும் வெளியிலும் பயன்படுத்துங்கள்.
5.உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
6. மது, புகையிலை  பழக்கத்தை அறவே ஒழியுங்கள்
7.அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள்.

புற்று நோய் பரிசோதனை வழிகள் 

முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

புற்று நோய் சிகிச்சை 


ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு `பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்’ என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.

 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு `மேஜர்’ ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது `சிம்பிளான’ ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று `ரிஸ்க்’தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

புற்றுநோய் பாத்தித்த இடம், கட்டியின் தர வரிசை, புற்றுநோயின் நிலை, மற்றும் நோயாளியின் பொதுவான (செயல்திறன் நிலைமை) நிலை ஆகியவற்றை அறிந்துகொண்ட பின்னரே சிகிச்சை முறையை தேர்வுசெய்யலாம். பல சோதனை புற்றுநோய் சிகிச்சை முறைகள் மேம்பாடு அடைந்துள்ளன.

உடம்பிற்கு பாதிப்பு ஏற்படாமல் புற்றுநோயை முழுமையாக அகற்றுவதே சிகிச்சையின் நோக்கமாகும். சிலநேரங்களில் இதனை அறுவைச்சிகிச்சை மூலம் செய்யலாம், ஆனால் நுண்மையான மெடாச்டாசிஸ் மூலம் புற்றுநோய் அண்மையில் உள்ள திசுக்களுக்கு பரவும் வாய்ப்பு அல்லது தூரமான இடத்திற்கு பரவும் வாய்புகள் பல நேரங்களில் இவ்வகையான சிகிச்சையின் ஆற்றலை குறைத்துவிடுகின்றன. கெமொதெராபி (வேதிச்சிகிச்சை)யின் ஆற்றல் உடலின் மற்ற திசுக்களில் ஏற்படும் நச்சுத்தன்மையினால் குறைகிறது. கதிர் இயக்க சிகிச்சையும் பொதுவான திசுக்களை பாதிக்கும்.

"புற்றுநோய்" என்பது நோய்களின் பிரிவை குறிப்பிடுவதால், அதற்கு ஒரேயொரு "புற்றுநோய் தீர்க்கும் சிகிச்சை முறை " இருப்பது சாத்தியமாகாது, இதை தொற்று நோய்களுக்கான ஒரே ஒரு சிகிச்சை முறை என்ற நடைமுறையில் ஒவ்வாத கருத்துடன் ஒப்பிடலாம்.


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!. ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.